Thursday, December 6, 2007

பேரின்பம்!

என் நெஞ்சைக் களவாடியவுன்
கண்களென் கண்களி லுறவாடும்!
அந்நோய் தந்தயென் கண்கள்...
தாமுமந் நோயிற் றுவண்டு வாடும்!

ஒருவரையொருவர்
அறியாதவர்போல்!
பொதுவாய் நோக்கினுமுன்
கனிமொழி யாசித்தென்
செவியிரண்டுமேங்கும்!

விழிகள் தொலைத்த நித்திரையதில்...
கனவு வந்தெனை உன்னுள்...
சுகமாய் தொலைக்கும்...

நனவென்பவது
இல்லாது போகின்!
நானுனைப் பிரியும்
தருணமுமேது?

எனன்பனே! நீயெனை
எத்தன்மையில் நினைத்திடினும்...
வெகுளேனென்றறிவாய்!
அத்தன்மையில் நீயும்...
வெகுளாயென்றறிவேன்!

என்றும் நீயென்னுள்
உவந்துறைவதை...
அறிவேனென்றறிவாய்!
அஃதெனவே நானும்
உன்னுள்ளுவந்துறைவதை...
அறிவாயென்றறிவேன்!

இஃதன்றி
பிரிவினிலும்...
பிரிவாற்றுவதேது?

நினைத்தாலும் அக்கணமே!
பேரின்பம் தருவதேது?!

Sunday, December 2, 2007

எங்கள் தமிழே!

தமிழ் அன்று சுவாசமாய்!
ஆங்கிலம் அலுத்தால்
இன்றொரு மாற்றத்திற்காய்!

நா நுனியில் ஆங்கிலம்
இனிக்க இனிக்கப் பேசுவாள்
அழகியத் தமிழ் மகளிவளென
புகழ்ந்துப் பேசுகிறார்...
வியந்துப் பார்க்கிறார்!

இந் நிலை மாற்ற
தமிழைத் தேற்ற
புரட்சி செய்வதன்றி
வேறு வழியுண்டோ?!

அப்புரட்சி செய்திடவும்
என் பாரதி
இங்கில்லையே!
அவன் நெஞ்சுப் பொறுக்காதே!

இனி யொரு விதிசெய்ய
தமிழ்வளர்க்கச் சங்கம் வைப்போமெனில்
அதற்குமோர் விவாத மெழுமே!

சங்கம் வைப்பது
அமெரிக்காவிலா?
துபாயிலா?.....!....