Thursday, September 3, 2009

தேர்தல்

ஐந்தாண்டு காலங்கள்
கண்டதென்ன? கொண்டதென்ன?
சிந்தித்துப் பார்க்கவே
குழப்பந்தான் மிஞ்சுதே!


குழம்பிய தெளிவினிலே
“குறள்’ கின்றேன்
கேளுங்கள்.........


தேர்தல் என்பது யாதெனின் என்றேனும்
ஓரிரு நலம் பயக்குவது.

அரசியலில் ஊழல் நன்றன்று அன்று
ஊழலே அரசியல் இன்று.

ஊழல்செய்வா ரனைவ ரவருள்சிறுக
செய்வாரை கொணர்தல் நன்று.

ஒட்டுவார் ஒட்டுக சுவரொட்டி அதனை
ஆடுகள் மேயு மாறே.

தேர்தலில் வாக்களிப்பார் வாக்கு அச்சொல்
நீரினில் எழுதிய சொல்.


Sunday, January 4, 2009

இன்றென்ன மனிதன்?

முல்லைக்கு தேர் கொடுத்தான் பாரி! அவன்
தன்மைக்கு விடை கொடுத்தோம் பாரீர்!

மண்காக்க உயிர் கொடுத்தார் தோழர்!
இன்றவர்தம்
வன்மைக்கு கை கூப்ப சோம்பல்!

நட்பை காக்க
பொருள் துறந்தாரன்று!

பொருள் சேர்க்க
நட்பை துறக்கிறாரின்று!

உண்மை வேறு
பொய் வேறு அன்று!
உண்மையும் பொய்யும்
ஒன்றுதானின்று!


நேற்றென்ன ?
இன்றென்ன?
நாளையென்ன?
.

.
.
.
பொருள்
காலத்தை வென்றும்
நிற்பதென்ன?

மனிதனென்ன?
குரங்கென்ன?
மரமென்ன?


யாவும் ஒன்றென்றே
உரைத்தால் தவறென்ன?



...

இன்றைய “அறிவு”இயல்....

அறிவுடையார் எல்லாம் தமக்குரியர் அறிவிலார்
என்பும் உரியர் பிறர்க்கு...

அறிவீனும் கல்வி அது ஈனும்
பொருளெனும் நாடாச் சிறப்பு......

Thursday, October 30, 2008

உலகத்தோடொட்டவொழுகல்......

உள்ளொன்று வைத்து
புறமொன்று பேசுவார்-இவர்

உலகத்தா ருள்ளத்துள்
உளமாற உய்குவார்!

நண்பனுக்கும் நண்பனாய்- ஆங்கே
பகைவனுக்கும் நண்பனாய்
சிறப்பொடு செய்கிறார்!
செல்வந்த ராகியே
செழிப்பொடு சிரிக்கிறார்!- இவரை

நம்புதல் யாவர்க்கு மெளிய அறியவாம்
நம்பிய வண்ணம் பெறல்.....

எனவறிந்தும்....

“உலகத்தோ டொட்டவொழுகல்”
எனச் சொல்லியே

பேதையவ ரிவரை
பின்தொடர் வாரேன்?!

ஏய்ப்போரை
போற்றுவாரேன்?!

“உலகத்தோ டொட்டவொழுகல்”

வள்ளுவனே? நீயெதைச் சொன்னாய்?!

Friday, October 24, 2008

பொன்னானதன்றோ சனியும்! ஞாயிறும்!


கதை கதையாம் காரணமாம்
கல்யாண தோரணமாம்
தொலைக்காட்சி நெடுந்தொடரினிலே!

திங்களிலே தொடங்கிடுமாம்
வெள்ளிவரை தொடர்ந்திடுமாம்...
ஆயிரமாவது வாரமாம்!

பழிவாங்கும் எண்ணமதை
பண்பில்லா குணமதனை
போற்றியே சொல்கிறதாம்......

இன்றிறுதி வாரமாம்!
அவையாவும் தவறெனவே
சொல்லியே முடித்ததுவாம்!!

இத்தனை காலம்வரை
இல்லத் துள்ளோரெலாம்
புத்தியுள்ள கோமாளியாய்
மதியிழந்த அறிவாளியாய்
பொன்னான நேரமதை
வீண்செய்தே வாழ்ந்தனராம்....

மீண்டுமோர் புதிய
நெடுந்தொடர் தொடங்கியதாம்!
அன்னவர்தம் தொடர்கதையும்
தொடர்ந்து விட்டதுவாம்!!!

திங்கள்முதல் வெள்ளிவரை சனிக்காலம்!
பொன்னான தன்றோசனியும் ஞாயிறும்!!

Friday, September 26, 2008

கல்வியென்பது....

"கற்றது கைமண்ணளவு...
கல்லாதது உலகளவு!"

இன்று...

கற்க முற்பட்டது கைமண்ணளவு...
கற்று கொண்டது களிமண்ணளவு...
விற்க முற்பட்டது அவ்வளவும்...
விற்று தீர்ந்தது தன்னளவே!

அரசியல்!

விலங்கினை பகுத்தறிந்து
ஆராய்வது விலங்கியல்...
விலங்கான மனிதனை
பகுத்தறிவது அரசியல்!

வரலாறு!

முன்பே நிகழ்ந்ததல்ல வரலாறு...
நாளை படைக்கவிருப்பதே வரலாறு!
மாறி வருவது புவியியல்...என்றும்...
மாறாமல் நிற்பதே வரலாறு!