Thursday, October 30, 2008

உலகத்தோடொட்டவொழுகல்......

உள்ளொன்று வைத்து
புறமொன்று பேசுவார்-இவர்

உலகத்தா ருள்ளத்துள்
உளமாற உய்குவார்!

நண்பனுக்கும் நண்பனாய்- ஆங்கே
பகைவனுக்கும் நண்பனாய்
சிறப்பொடு செய்கிறார்!
செல்வந்த ராகியே
செழிப்பொடு சிரிக்கிறார்!- இவரை

நம்புதல் யாவர்க்கு மெளிய அறியவாம்
நம்பிய வண்ணம் பெறல்.....

எனவறிந்தும்....

“உலகத்தோ டொட்டவொழுகல்”
எனச் சொல்லியே

பேதையவ ரிவரை
பின்தொடர் வாரேன்?!

ஏய்ப்போரை
போற்றுவாரேன்?!

“உலகத்தோ டொட்டவொழுகல்”

வள்ளுவனே? நீயெதைச் சொன்னாய்?!

Friday, October 24, 2008

பொன்னானதன்றோ சனியும்! ஞாயிறும்!


கதை கதையாம் காரணமாம்
கல்யாண தோரணமாம்
தொலைக்காட்சி நெடுந்தொடரினிலே!

திங்களிலே தொடங்கிடுமாம்
வெள்ளிவரை தொடர்ந்திடுமாம்...
ஆயிரமாவது வாரமாம்!

பழிவாங்கும் எண்ணமதை
பண்பில்லா குணமதனை
போற்றியே சொல்கிறதாம்......

இன்றிறுதி வாரமாம்!
அவையாவும் தவறெனவே
சொல்லியே முடித்ததுவாம்!!

இத்தனை காலம்வரை
இல்லத் துள்ளோரெலாம்
புத்தியுள்ள கோமாளியாய்
மதியிழந்த அறிவாளியாய்
பொன்னான நேரமதை
வீண்செய்தே வாழ்ந்தனராம்....

மீண்டுமோர் புதிய
நெடுந்தொடர் தொடங்கியதாம்!
அன்னவர்தம் தொடர்கதையும்
தொடர்ந்து விட்டதுவாம்!!!

திங்கள்முதல் வெள்ளிவரை சனிக்காலம்!
பொன்னான தன்றோசனியும் ஞாயிறும்!!

Friday, September 26, 2008

கல்வியென்பது....

"கற்றது கைமண்ணளவு...
கல்லாதது உலகளவு!"

இன்று...

கற்க முற்பட்டது கைமண்ணளவு...
கற்று கொண்டது களிமண்ணளவு...
விற்க முற்பட்டது அவ்வளவும்...
விற்று தீர்ந்தது தன்னளவே!

அரசியல்!

விலங்கினை பகுத்தறிந்து
ஆராய்வது விலங்கியல்...
விலங்கான மனிதனை
பகுத்தறிவது அரசியல்!

வரலாறு!

முன்பே நிகழ்ந்ததல்ல வரலாறு...
நாளை படைக்கவிருப்பதே வரலாறு!
மாறி வருவது புவியியல்...என்றும்...
மாறாமல் நிற்பதே வரலாறு!

Sunday, June 15, 2008

அறமாமோ?

சுயத்தையும் அற்றொழித்து
பொருட்பெற விழைகிறார்!-பின்
அப்பொருள் துறப்பரெனினும்
சுயத்தை மீட்க
வழியிலை யென்றறிந்தும்!

நெஞ்சகத்தே பொய்யின்றி
இச்சகத்தில் இன்பமுற
வழியுமிலை யென்கிறார்!

உச்சக்கட்ட ஆசைதனில்
சுயமென்ன? அறமென்ன?
சுயாதீனம் அற்றபின்
சுதந்திரத்தின் பொருளென்ன?

பஞ்சமுமிங்கு வந்ததே!
வாய்மைக்குமே! என்
தாய் திருநாட்டினிலே!

வாய்மையிங்கு வறண்டேபோயினும்
வாய்பிளப்பார் யாருமில்லை!
"வாய்திறந்தால் வறுமையோ" வென
அச்சம்கொண்ட தரணியிலே!
...............................................................!!!!!
.....இது.........அறமாமோ?!

Thursday, April 24, 2008

ஏதுமில்லா காதல்!

சொல்லியும அர்த்தம் விளங்கவில்லை...
அர்த்தமாய் சொல்ல தெரிவதுமில்லை!

நினைத்தால் இன்பம் முடியவில்லை...
இன்பமாய் நனைக்க முடிவதுமில்லை!

உன்சொற்களை எதிர்ப்பார்த்தால்...
ஏமாற்றம் மிஞ்சுமென்று...

என் சொற்களுக்கு...
அணை கட்டினேன்...
அணையும் நிரம்புவதில்லை!

இந்நிலைத் தேற்ற வழியுண்டோ?
வழிக் கண்டால் ஏதுபயன்?
தேற்றிக் கொள்ள மனதுமில்லை!

அழகாய்!

அழகாய் வளர்ந்து
அழகாய் பூத்து
அழகாய் மலர்ந்த
காதல் பூவை
அழகாய் வெட்டி
எடுத்து சென்றான்
கால மென்னும்
காதல்பூந் தோட்டத்து
காவல் காரன்!

Sunday, April 20, 2008

தொகை!

இப்பூமியில் நல்லோர் எண்ணிக்கை குறுந்தொகை!
தீமையில் வல்லோர் எண்ணிக்கை பெருந்தொகை!

புறநானூற்று வெற்றி!

இங்கே அகத்தை மதிப்பவர் நானூறு!
புறத்தை மதிப்பவரோ நானூறு கோடி!
இதுவே எங்கள் புறநானூற்று வெற்றி!!!

கூண்டில்....

கூண்டுக்கிளியைக் கண்டு
அனுதாபம் கொள்கிறான்!
தான் அதனினும்
அகண்ட கூண்டில்
அடைப்பட்டுக் கொண்டு!!....

கர்ஜனை!

சிங்கம் கர்ஜிக்கிறது!
தன்னினும் கொடியவனாய்
உயிர்களை வதைத்தும்...
சுதந்திரமாய் நடமிடும்....
மனிதனைக் கண்டு!!!!!

Saturday, April 12, 2008

சொர்க்கம்!

சான்றோர் உறைவிடம் சொர்க்கம்!
சொர்க்கத்தின் உறைவிடம் இந்தியா!

Monday, February 18, 2008

ஊடல்!

இதழோடு ஊடற்கொண்ட
ஆசை மொழிகள்...
ஓசையின்றி மனதில்...
ஆயிரம் கோலமிடும்!

விழிகளில் பொய்கள் ஜாலமிடும்!
ஓரினிய வசந்தக்கால போர்க்களம்!

ஒலி!

அவள் மனதில் ஒலித்தது...
இவன் மனதின் ஓசை!

அவள் சொற்களின் மௌனத்திலோ...
உடைந்தது இவன் மனம்!

காதலின் வளமை!

தனிமையில் மனதும்...
மௌனத்தில் இதழும்...
காதலில் இனிமை!

ஆசைகள் மோதிக்கொள்ளும்...
கவிதையில் கூடிக்கொள்ளும்...இது
காதலின் உரிமை!

ஒருவர் உளியாய்...
ஒருவர் சிற்பியாய்...
செதுக்கிக் கொள்வர்...
காதலெனும் ஓரழகிய சிற்பம்!

ஓசை!

எழுத்தின் தனிமை...
சொல்லின் மௌனம்!

சொற்களின் தனிமை...
கவிதையின் மௌனம்!

கவிதையின் தனிமை...
மொழியின் மௌனம்!

மொழியின் தனிமை...
பேச்சின் மௌனம்!
மொழியின் மயானம்!

மௌனத்தால் ஏதுபயன் கண்டார்?
ஓசையே மௌனத்தின் வலியது!

Saturday, February 16, 2008

கனவு!

பகலில் கனவு...
உழைப்பை கெடுப்பது- நீ
சோம்பலில் விழுவது!

இரவில் கனவு...
உறக்கம் கெடுப்பது- நீ
உற்சாகம் இழப்பது!

பகல் கனவு பலிக்கா தென்பர்!
இரவில் கண்டால் மட்டும்
பலிக்குமா என்ன??

சிந்தனை மட்டுமே
செயலில் எழுவது!

கனவில் விளைவது சிற்றின்பம்!
சிந்தனையில் விளைவதே பேரின்பம்!

சிந்தனை செய்!
செயலில் கொள்!
பேரின்பம் காண்!

Sunday, February 3, 2008

கடுமை!

கோடியில் புரளும்
செல்வந்தன் மனதில்
மகிழ்ச்சியின் வறுமை!

"உழைப்பின் வாரா
உறுதிகள் உளவோ?"- என்றுழைத்தும்
இளமையில் வறுமை!

................................................

செழுமையிலும் மகிழ்ச்சியின் வறுமை!
செம்மையிலும் செழுமையின் வறுமை!

இதுவோ...
காலத்தின் கொடுமை?!
படைத்தவனின் கடுமை?!

விளைவு.....
"வறுமையிலும் செம்மை"
இன்றானது மடமை!

Friday, February 1, 2008

முரணானவன்!

முரணெனத் தெரிந்தும்
முந்திக் கொண்டு
முனைந் திணைவான்
...........காதலன்.................

..........இணைந்தப்பின்...........
முரணெனத் தெரிந்ததும்
பிந்திக் கொண்டு
பிரிந்திடுவான்..........
.............கணவன்....................

முன்னுக்குப் பின்
முரணானப் பின்னும்
பிரியாதிருப்பான்....
நண்பன் ஒருவனே!

அழகி போட்டி!

ஆயிரம் பேர்
ஒன்று கூடி!

கோடி மக்கள்
கண்கள் காண!

நடத்திடுவார்
"இடை"த் தேர்தல்!

அவளல்ல....

அரை குறையாடை!
அடுத்தவர் பார்வைக்கு
அவளிடைத் தெரிய...
பூனை நடையிடுவாள்!
அவளல்ல தமிழ்ப்பெண்!

தன்னிடை மறைத்து...
எளிமையின் தோற்றமாய்...
உறுதி கொண்ட நெஞ்சொடு
பீடு நடையிடுவாள்!
இவளே தமிழ்ப்பெண்!

அலைப்பாயும் மனதொடு
அவளின் இடையை
உற்று நோக்கிடுவார்!
அவளல்ல தமிழ்ப்பெண்...

அன்னவர்தம் பார்வையையும்
திருத்திடச் செய்குவாள்!
..........................................................
"சாதனைப் பெண்"ணென்பார்!
மதித்துப் போற்றிடுவார்!
"அதிசயம்" என்றே
உற்று நோக்குவார்!
இவளே தமிழ்ப்பெண்!

பெண்ணே!
அரைகுறைப் பார்வை
அவர் தவறல்ல!

அரைகுறை யாடை
உன் தவறு!

......நீ.......
எத்தன்மை யானவள்?
நீயே தெளிந்திடு!

Wednesday, January 23, 2008

தெருவில் கிடத்திய வீணை...

புரிதலில்லா காதலும்...
காதலில்லா கலையும்...
கலைகளறியா மனிதனும்...
தெருவில் கிடத்திய வீணையன்றோ!

Monday, January 14, 2008

உகந்ததே!

பணமும் புகழும் உகந்ததே!
உனக்குத் தலைக்கனம் இல்லாதவரை!

பெருமையும் பெருமிதமும் உகந்ததே!
உனக்குப் பகட்டில் லாதவரை!

தற்புகழ்ச்சியும் உகந்ததே! -நீ
பிறரை ஏளனம் செய்யாதவரை!

அளவுகோல்!

அன்பையும்கூட அளந்துவிடு!
ஏனெனில்....
அளவுக்கு மிஞ்சினால்....
அதுவும்.......நஞ்சுதான்.......!

மறந்தும் நீ
முயற்சியை அளந்துவிடாதே!
அளவுக்கு மிஞ்சினால்.....
அதுதான் வெற்றியை தரும்!
இன்பம் தேனென பாயும்!