Saturday, December 1, 2007

அறிந்திரு!

அறிந்ததை யறிந்து செயினும்...
அறியாததை யறியாமல் செயினும்...
தெரிந்ததைத் தெரியுமெனச் சொல்...
தெரியாததைத் தெரியாதென்றே சொல்...
இதுவே அறிவுடையார் செயல்!

தன்னொளிக் கொண்டு
இவ் வுலகையே
ஒளிரச் செய்யும்
சூரியன் போல்

சுய அறிவால்
நீ உயர்ந்திடு...
இதுவே அறிவுடையார் செயல்!

இரவல் ஒளியுண்டு
இரவில் தானொளிரும்
சந்திரன் போல்

இரவல் அறிவால்
உயர நினைப்பது
உன் அறிவீனம்!
இதை நீ அறிந்திரு!

Friday, November 30, 2007

ரோபோ!

பள்ளி சென்று
வீடு திரும்பும்
தன்செல்வ மைந்தனை

அகம் குளிர...
முகம் மலர...
புன்முறுவலாய்...

அன்போடழைத்து...
அணைத்து...
கொஞ்சி...
விளையாடி...
உறவாட...

ஆசையாய்...
ஆவலாய்...
காத்திருக்குமாம்...
ரோபோ!
நாளை.....

இவ்வின்பம் தொலைத்து...
இவன் ஆகிவிடுவான்...
ரோபோ!....
நாளை.....

அறிவியலோ டிணைந்து...
இன்னும் எங்கெங்கு...
செல்வானோ...
இம்மனிதன்....!....?....

நெரிசல்!

எந்நாட்டில்
எப்பொழுதுமே
போக்குவரத்து நெரிசல்!

பேருந்தும் லாரியுமாய்...
மோட்டாரும் சைக்கிலுமாய்...

இன்றோ
நெரிசலின்றி
சுகமாய்!.....

அண்ணார்ந்து...
பார்த்தபின்தான்
புரிகிறது.....
போக்குவரத்து நெரிசல்
வானிலென்று!

எந்நாட்டிலுமா
பணம் படைத்தோர்
பெருகிவிட்டனர்?!

Thursday, November 29, 2007

குறளே!

ஒன்றரையடி மட்டும்
மலர்ந்தக் குறளே!
நின்னாழத்தை யறிய
விழைவதில்லை
எவருமே!

ஐந்தடி மலர்வாள்
மங்கை யொருவள்,
ஆயிரமடி
மனமும் கொள்வாள்!

அவளாழம்
அறியமட்டும்...
கொண்டதனைத்தும்...
கொள்வதனைத்தும்....
தொலைத்திருந்தும்...
தொடர்ந்திருப்பரேன்?

அவ் வாயிரமடிக்கு....
உனைத் தொடர்ந்திருந்தால்...
சான்றோராயிருப்பரே!....?.......!

ஏன்?

தன்னைத் தானறியான்,
தன் மனமும்
தானறியான்,

ஊரறியான்,
உழைப்பறியான்,

வெற்றியறியான்,
தோல்வியிதுவென
தானறியான்,

உணவறிவான்,
உறக்கமறிவான்,
உண்டுறங்குவதே
சுகமென்பான்,
சோம்பித்திரிவான்,

இவன்கருதி
பிறருழைப்பர்,
அவருழைப்பில்
தானமர்வான்,

இன்றுமிவர்..
இவனருகில்
இருப்பரேன்?
திருந்த
மறுப்பரேன்?