Sunday, December 16, 2007

கலியுகவாசி!

வாய்மை யெனப்படுவது யாதெனின் தனக்கென்றும்
தீமை இலாத சொலல்!

பொய்ம்மையே வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை தனக் கெனின்!

தன்னைத்தான் காக்க பொய்க்காப்பான் காவாக்கால்
சோகாப்பன் சொல்லிழுக்குப் பட்டு!

செல்வத்துள் செல்வம் பணம் அச்செல்வம்
செல்வத்துள் எல்லாம் தலை!

பொய்ம்மையே வாய்மையெனக் காணும் கலியுகனே
உனக்கு வள்ளுவமும் பொய்யே!

துயிலெழும் பகலும் துயில் கொள்ளும்
இரவும் உனக்குப் பொய்யே!

பொய்யெனும் திரைக்குள்
ஒளித்து வைத்தவுன்
அழகு முகத்தை
அன்பிற்காவது திறவாயோ!
உனன்பும் பொய்யோ?!

வாய்மையி லல்லாது-நீ
வாழ்ந்தென்ன பயன்?
உன்னோடு வாழும்
பிறர்க்கென்ன பயனோ?!

Saturday, December 15, 2007

வெண்ணிலா!

வெண்ணிலவொளியில்
உன் முகமழகு!

உன்னருகாமையில்
அந் நிலவழகு!

நிலவிலுமுன்
அழகியமுகமே!

என் கார்க்குழலாலுன்
முகம் மறைத்தேன்...

...வெண்ணிலா மறைந்துவிட்டதே!
வானம் இருண்டுவிட்டதே!

அழகு!

அகத்தின் அழகு
முகத்தில் தெரியும்...

....இன்று....
முகத்திரையை
கிழித்தால் மட்டும்....

Thursday, December 6, 2007

பேரின்பம்!

என் நெஞ்சைக் களவாடியவுன்
கண்களென் கண்களி லுறவாடும்!
அந்நோய் தந்தயென் கண்கள்...
தாமுமந் நோயிற் றுவண்டு வாடும்!

ஒருவரையொருவர்
அறியாதவர்போல்!
பொதுவாய் நோக்கினுமுன்
கனிமொழி யாசித்தென்
செவியிரண்டுமேங்கும்!

விழிகள் தொலைத்த நித்திரையதில்...
கனவு வந்தெனை உன்னுள்...
சுகமாய் தொலைக்கும்...

நனவென்பவது
இல்லாது போகின்!
நானுனைப் பிரியும்
தருணமுமேது?

எனன்பனே! நீயெனை
எத்தன்மையில் நினைத்திடினும்...
வெகுளேனென்றறிவாய்!
அத்தன்மையில் நீயும்...
வெகுளாயென்றறிவேன்!

என்றும் நீயென்னுள்
உவந்துறைவதை...
அறிவேனென்றறிவாய்!
அஃதெனவே நானும்
உன்னுள்ளுவந்துறைவதை...
அறிவாயென்றறிவேன்!

இஃதன்றி
பிரிவினிலும்...
பிரிவாற்றுவதேது?

நினைத்தாலும் அக்கணமே!
பேரின்பம் தருவதேது?!

Sunday, December 2, 2007

எங்கள் தமிழே!

தமிழ் அன்று சுவாசமாய்!
ஆங்கிலம் அலுத்தால்
இன்றொரு மாற்றத்திற்காய்!

நா நுனியில் ஆங்கிலம்
இனிக்க இனிக்கப் பேசுவாள்
அழகியத் தமிழ் மகளிவளென
புகழ்ந்துப் பேசுகிறார்...
வியந்துப் பார்க்கிறார்!

இந் நிலை மாற்ற
தமிழைத் தேற்ற
புரட்சி செய்வதன்றி
வேறு வழியுண்டோ?!

அப்புரட்சி செய்திடவும்
என் பாரதி
இங்கில்லையே!
அவன் நெஞ்சுப் பொறுக்காதே!

இனி யொரு விதிசெய்ய
தமிழ்வளர்க்கச் சங்கம் வைப்போமெனில்
அதற்குமோர் விவாத மெழுமே!

சங்கம் வைப்பது
அமெரிக்காவிலா?
துபாயிலா?.....!....

Saturday, December 1, 2007

அறிந்திரு!

அறிந்ததை யறிந்து செயினும்...
அறியாததை யறியாமல் செயினும்...
தெரிந்ததைத் தெரியுமெனச் சொல்...
தெரியாததைத் தெரியாதென்றே சொல்...
இதுவே அறிவுடையார் செயல்!

தன்னொளிக் கொண்டு
இவ் வுலகையே
ஒளிரச் செய்யும்
சூரியன் போல்

சுய அறிவால்
நீ உயர்ந்திடு...
இதுவே அறிவுடையார் செயல்!

இரவல் ஒளியுண்டு
இரவில் தானொளிரும்
சந்திரன் போல்

இரவல் அறிவால்
உயர நினைப்பது
உன் அறிவீனம்!
இதை நீ அறிந்திரு!

Friday, November 30, 2007

ரோபோ!

பள்ளி சென்று
வீடு திரும்பும்
தன்செல்வ மைந்தனை

அகம் குளிர...
முகம் மலர...
புன்முறுவலாய்...

அன்போடழைத்து...
அணைத்து...
கொஞ்சி...
விளையாடி...
உறவாட...

ஆசையாய்...
ஆவலாய்...
காத்திருக்குமாம்...
ரோபோ!
நாளை.....

இவ்வின்பம் தொலைத்து...
இவன் ஆகிவிடுவான்...
ரோபோ!....
நாளை.....

அறிவியலோ டிணைந்து...
இன்னும் எங்கெங்கு...
செல்வானோ...
இம்மனிதன்....!....?....

நெரிசல்!

எந்நாட்டில்
எப்பொழுதுமே
போக்குவரத்து நெரிசல்!

பேருந்தும் லாரியுமாய்...
மோட்டாரும் சைக்கிலுமாய்...

இன்றோ
நெரிசலின்றி
சுகமாய்!.....

அண்ணார்ந்து...
பார்த்தபின்தான்
புரிகிறது.....
போக்குவரத்து நெரிசல்
வானிலென்று!

எந்நாட்டிலுமா
பணம் படைத்தோர்
பெருகிவிட்டனர்?!

Thursday, November 29, 2007

குறளே!

ஒன்றரையடி மட்டும்
மலர்ந்தக் குறளே!
நின்னாழத்தை யறிய
விழைவதில்லை
எவருமே!

ஐந்தடி மலர்வாள்
மங்கை யொருவள்,
ஆயிரமடி
மனமும் கொள்வாள்!

அவளாழம்
அறியமட்டும்...
கொண்டதனைத்தும்...
கொள்வதனைத்தும்....
தொலைத்திருந்தும்...
தொடர்ந்திருப்பரேன்?

அவ் வாயிரமடிக்கு....
உனைத் தொடர்ந்திருந்தால்...
சான்றோராயிருப்பரே!....?.......!

ஏன்?

தன்னைத் தானறியான்,
தன் மனமும்
தானறியான்,

ஊரறியான்,
உழைப்பறியான்,

வெற்றியறியான்,
தோல்வியிதுவென
தானறியான்,

உணவறிவான்,
உறக்கமறிவான்,
உண்டுறங்குவதே
சுகமென்பான்,
சோம்பித்திரிவான்,

இவன்கருதி
பிறருழைப்பர்,
அவருழைப்பில்
தானமர்வான்,

இன்றுமிவர்..
இவனருகில்
இருப்பரேன்?
திருந்த
மறுப்பரேன்?

Thursday, November 22, 2007

அந்நியன்!

" சுதந்திரம்" - இச்சொல்லை வாசிக்கையிலாவது
ரத்தம் சிந்திய நம்வீரர்களை
எண்ணியாவதுப் பார்த்திருக்கிறாயா?

தொலைக்காட்சியில் தேசியக்கொடி,
வானொலியில் தேசியகீதம்,
எழுந்தாவது நின்றிருக்கிறாயா?

பேசுவது ஆங்கிலமொழி,
பார்ப்பது ஆங்கிலப்படம்,
கேட்பது பாப் இசை,
சுவற்றிலோ மர்லின்மன்ரோ!

அந்நியக் கலாச்சாரம்,
அதற்கோர் புகழாரம்,

'தமிழ் எனக்கு வராது"
சொல்வதில் உனக்குப் பெருமிதம்,

செல்வது அயல்நாடு
திரும்பும் எண்ணமும் தோன்றாது!

அங்கு உனை ஈர்ப்பதென்ன?
இங்கு அதில் குறைவதென்ன?

அறிவாளிகள்?
திறமைசாலிகள்?
அன்பானவர்கள்?
அறிவியல் முன்னேற்றம்?

இவையா?
பணமா?

பணமென்றால்......
அங்கேயே நீ இருந்துவிடு!
இந்நாட்டிற்கு நீ அந்நியனாகிவிடு!
சிறை வாசம்!

சிறைவாசம் கண்டப் போதும்
வரலாறு படைத்தனர் அன்று!

காதலில் சிறைவாசம் கண்டு
வெட்டியாய்க் கழிக்கிறாய் இன்று!

அவர்கள் வரலாற்றைப்
படித்தாவதுப் பார்!

உன் வரலாற்றில்
அதாவது இருக்கட்டும்!

அன்பளிப்பு!

அழைப்பிதழில் என் முகம்..
அன்பளிப்பில் உன் முகம்!

கண்டுக் கண்டுக் களிக்கிறேன்!
உன்னன்பில் நான் மிதக்கிறேன்!

வியப்பு!

"'உன் நடனத்தில் வியந்தேன்
ஆடும் மயில் நீயெனன்று!

இசையில் உணர்ந்தேன்
நான் உன்
குரல் வசமென்று!

ஓவியமாக் கண்டேன்?
உன்சிந்தைக் கண்டேன்!

உன் கவிதைத்தமிழில்
உண்ணுள் உறைந்தேன்!"

...................
மொழியும் கலையும் இல்லையெனில்
மனிதர்க்கு உணர்வும் இல்லை...அதை
வெளிப்படுத்த வழியும் இல்லை..
........!!!!!

Wednesday, November 21, 2007

ஆர்வக் கோளாறு!

அன்றெனக்குத் திருநாள்!

உன்னழகு முகத்தைக்
கணினியில் பார்த்தாலே
பரவச மடைவேன்!
புத்துணர்வுப் பெறுவேன்!

" இன்றோ நேரில்....
என்னாவேனோ"...என்றிருந்தேன்!

உன்னைக் காண....விளையாட்டில்
உன்திறனைக் காண
ஓடோடி வந்தேன்!

கண்டேன்...வியந்தேன்!
மகிழ்ச்சிக் கடலில்
மூழ்கித் திளைத்தேன்!

சாதனைகள்பல நீ புரிந்தபோதும்
தீராத தாகம் எனக்கு!

வெற்றிக் கோப்பை
உன் கையிலா?
என் கையிலா?!
ஒன்றும் புரியவில்லை!

உன்னாலன்றோ
கோப்பைக்குப் பெருமை!

கோடிக்கும் பெருமை!

எனினும் இவை யிரண்டும்
உன்சிறுப் புன்னகைக்கு ஈடாகுமா?

நான் நேசிப்பது
விளையாட்டையா?
உன்னையா?

"விளையாட்"டென்றால்
அதன்மீது எனக்குக்
காதலாம்! ஆர்வமாம்!

'உன்னை" யென்றாலோ
ஆர்வக் கோளாறாம்!

உளறுகின்றனர்...
புரியாதவர்கள்!

கொள்ளை!

இசையிலெனை மறந்து
லயித்திருக்கும் பொழுதெல்லாம்....
அவன் குரலென்னை
திசைத் திருப்பும்!

நேசிக்கும் என்தமிழில்
உறைந்திருக்கும் பொழுதினிலும்...
என்கரம்பற்றி அவனோடு
இழுத்துச் செல்வான்!

அயர்ந்துறங்கும் வேளையிலாவது
இவன் என்னை
விட்டு வைக்கிறானா?!
அவன் முகத்தோடு
என்முகம் வைத்து
கதைப்பேசச் சொல்வான்!

தன் நண்பனிடம்
என் பெருமைப் பேசுவான்!
என்னையும் அவன்
தோழியாக்கிக் கொள்வான்!

பணிகளில் குறுக்கிடுவான்
தன்னாணைப் பிறப்பிப்பான்!

அதிகாரம் செய்வான்!
அடிமையாக்குவான்!

அடித்தாலும் என்னை
அணைத்தேக் கொல்வான்!
முத்தம்வாரி இறைப்பான்!

குறும்புகள் பலப்புரிந்தென்னைக்
கொள்ளைக் கொள்வான்!

எனையழைக்கும் மறுநொடி!
அவனருகில் நானிருப்பேன்!

அவனன்றி யாரழைப்பார்
என்னை..." அம்மா! வா இங்கே!

Tuesday, November 20, 2007

அடடா!

இடித்தால் சிரிக்கிறது வானம்!
பளிச்சென்று மின்னி!

அச்சிரிப்பில் உதிர்ந்த
ஆனந்தக் கண்ணீரில்
நனைகிறது பூமி!

மங்கை!

அன்றிவள் அடுப்படியில் கிடந்தாள்........
நேற்றிவள் விமானத்தில் பறந்தாள்...

இன்று விண்வெளியில் நடக்கிறாள்!
நாளைப்புதுக் கிரகத்தைக் கண்டறிவாள்!

இப்பூமியில் மங்கையிவள்
எவர்க்கும் சளைத்தவளல்ல!
எதிலும் சாதிப்பவள்!

கூண்டுக்கிளியல்ல இவள்..
உனக்குச் சிறகைக் கொடுத்தவள்!

சுமைத்தாங்குமிவள்
இடியையும் தாங்குவாள்!

தன்சுமைக்கூட
சுமக்கவியலா
வலுவற்றவனே!

இவளிடம் தஞ்சமடை!
நீயும் பலசாலியாகிவிடு!

Monday, November 19, 2007

கோழை!

கண்ணிருந்தும்
காட்சித் தெரிந்தும்
குருடனானவன்

உளமிருந்தும்
நெஞ்சுரமிருந்தும்
கோழையானவன்

உயர்வினிலும்
தாழ்வினிலும்
நிலைத்திடாதவன்

இறையளித்த
வாழ்வினில்
ஜெயித்திடாதவன்

ஜீவித்தால்
பூமிக்கு இவன்
பாரமா என்ன?

மரணித்தால்
மண்ணிற்கு இவன்
உரமா என்ன?

இவன்
இருந்தால் என்ன?
இறந்தால் என்ன?

தாமரையின் கோபம்!

என்னவனின் ஒளியை உண்டு
இரவிலுனைக் குளிரவைக்கும்
அவளை மட்டும்நீ பார்க்கிறாய்!

ஒளிதரும் என்னவனைப் பார்க்க
உன் கண்கள் கூசுகிறதா?

இதனால்தான்.....அவன்
என்னைக் குளிரவைத்து
உன்னைச் சுட்டெரிக்கிறான்!

ஒத்திகை!

அன்பைமட்டும் வாரி இறைத்த
என்னைப் போல் ஒருவள்
இன்று உன்னுடன் இருக்கையில்

நானெதற்கு என்று நினைத்துவிட்டாயா?
என்னன்பு மகனே?!

இப்படி எட்டி உதைக்கத்தான்
என்வயிற்றில் ஒத்திகைப் பார்த்தாயா?

அன்றுபோல் இன்றும் மகிழ்கிறேன்!
நீ மகிழ்ச்சியுடன் இருப்பதனால்!

வழுக்கி!

கல் தடுக்கி
மண்ணில் விழுந்தேன்
எழுந்தேன்

கால் வழுக்கி
சேற்றில் விழுந்தேன்
எழுந்தேன்

விதி வழுக்கி
வீதியில் விழுந்தேன்
எழுவேன்!
நிச்சயம் நான்
எழுவேன்!

பேதைமை!

" மனிதன் ரூபத்தில் கடவுளிருக்கிறான்"
என்றுரைக்கும் என் அன்பர்களே!
பின் அவனுக்குப் பலரூபங்கள்படைத்து
அவற்றை வணங்குதல் பேதைமையன்றோ?

"கடவுளுக்குக் காணிக்கை செலுத்தினால்
ஒரு கோடி நன்மை'
என்றுரைக்கும் என் அன்பர்களே!
"அதை இல்லாதவர்க்கு அளித்தால்
பல கோடி நன்மை"

இதை அறிவீரா? மாட்டீரா?

அண்டைவாசி!

அவர் என் அண்டைவாசி!
எழுஜென்ம பந்தம்போல் எங்களுறவு!
பட்டினியைப் பகிர்ந்தோம்!
உணவைப் பகிர்ந்தோம்!


செல்வத்தைப் பகிர்ந்தோம்!
செல்வங்களையுமல்லவா பகிர்ந்துள்ளோம்!

ஆம்!

அவர் மகள் என் மருமகள்!
என் மகன் அவர் மருமகன்!

சாபக்கேடு!

மனிதனின் ரத்தத்தை உறிஞ்சும்
கொடூர மிருகம் அரசியல்வாதி

அவனுக்குக் கூஜா தூக்கும்
கேவல மனிதன் கீழ்ஜாதி

லஞ்சம் வாங்கும் சுயநலவாதி
அவனைத்தடுக்க நடுங்கும் பயந்தாங்கொள்ளி

இவர்கள் யாவரும்
இந்நாட்டின் சாபக்கேடு!

Sunday, November 18, 2007

உணர்வில் உதித்த சிந்தனை!

அன்று வியந்திருந்தேன்!
எனை நனைத்தது
மழையா? உன் நினைவா? என்று!
குளிர்த்தது நிலவா? உன் முகமா?
இனித்தது மொழியா? உன் குரலா?
வெண்மைப் பாலா? உன் மனதா?

இன்றும் வியக்கிறேன்!
சுடுவதுத் தீயா? உன் சொல்லா?
கொதிப்பது நீரா? என் மனமா?
கசப்பதுக் காயா? உன் குரலா?
வெளுத்தது நிறமா? உன் குணமா?
இதுக் குழப்பமா? மாற்றமா?
பொய்யெது? மெய்யெது?


ம்........................................
உன் காதல் பொய்!
என் சிந்தை மெய்!
சிந்தித்து....உணர்ந்துக்கொண்டேன்!

எல்லை மீறல்!

உன்னை என்னோடு அழைத்து வந்தேன்
உன் உறைவிடமானேன்
என்னுள் எத்தனை யெத்தனை இன்பங்கள்? !
உறவுகள் சூழக் கொண்டாட்டங்கள்!

இவையாவும் நீடிக்குமென
நான் கண்ட கனவு பொய்த்தது!

எல்லைமீறி உன்னை நான்
என்னோடு நிறைத்திருந்தது குற்றமாம்!
சட்டம் எனை விரட்டியது
நான்மட்டும் தப்பிக்க முயன்றேன்
உனையென் உறவுகளிடமாவது
விட்டு வைக்கலாமென்று எண்ணி
எத்தனைக் காலம்தான் ஒளிவது?

சட்டமுனை என்னிடமிருந்து பறித்துக்கொண்டது!
உனை இழந்த நான்
பிழைக்க வழித்தேடி அலைகிறேன்

பேராசை பெருநஷ்டம் என்பர்!
இன்றுணர்ந்துக்கொண்டேன்...
பணத்தாசைப் பேராசையேன்று!

நேற்று வந்தாய்...
இன்று சென்று விட்டாய்!

நிசப்தம்!

குண்டுகள் துளைத்த உடல்கள்
எங்கள் தெருவெங்கும் சிதறும்
ரத்தம் ஆறென வழிந்தோடும்
குற்றுயிராய்க் கிடக்கும் உடல்களை
மனிதனாக்கப் போராடும் என்னன்பு உள்ளங்கள்!

நாட்கள் சிலவே கடந்தன!
மீண்டும் எங்கள் தெருவில்
வெள்ளமென மழை!
வருணதேவனின் சீற்றத்தால்
வலுவிழந்த என் சகாக்கள்
தென்படவில்லையே! மூழ்கிவிட்டனரோ!
குற்றுயிராய்க் கிடக்கும் உடல்களை
மனிதனாக்கப் போராடும் என்னன்பு உள்ளங்கள்!

இவையாவையும் அறியாதவன்போல்
அமர்ந்திருக்கும் என் இறைவா!
உன் சந்நதியில்மட்டும் ஏன் நிசப்தம்?
கண்டும் காணாமல் இருக்கிறாயே!
நீ கல்லாகிவிட்டதாலா?

நிபந்தனை!

நீ எனக்காகக் காத்திருக்கிறாய்
சுட்டெரிக்கும் சூரியன் தடுத்தாலும் வருவேனென்று
நானறிவேன் என்னன்பே!
நானில்லையெனில் நீ உயிர்த்திருக்க மாட்டாய்!

பேதையே! அதற்காகத்தானே
என் நண்பர்களைத் தூது விட்டேன்
பகைத்துக் கொண்டாயே!

இருப்பினும்...உன்னைத்தேடி
வழியெங்கும் ஓடி
நீ காணுமிடமெல்லாம் தேங்கி
உனக்காகக் காத்திருந்தேனே!

நீயோ...ஒவ்வொரு முறையும்
என்னைப் பாழாக்கி...வீணாக்கி....
இறுதியில் என்னை
ஆவியாக்கி விட்டாய்!

மீண்டும் வருவேன்!
அன்றாவது நான் தங்க ஓரிடம் தருவாயா?
மறுப்பாயெனில்...
இனி என்றும் உனைக் காண
நான் வருவதாக இல்லை!

மனிதனுக்கு மழை விதிக்க வேண்டும்
இப்படி ஒரு நிபந்தனை!